This Article is From Mar 17, 2019

மதுரையில் மா.கம்யூ., வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கிறாரா மு.க.அழகிரி?

திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் மதுரை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மதுரையில் மா.கம்யூ., வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கிறாரா மு.க.அழகிரி?

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. பிரதான கட்சிகளான திமுக - அதிமுக உள்ளட்ட கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து, வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் மதுரை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், மதுரை தொகுதியில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார்.

தனது தேர்தல் பரப்புரையை தொடங்கிய சு.வெங்கடேசன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், தான் வேட்பாளராக தேர்வானதற்கு எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்றும், மதுரையை வளர்ச்சியடைந்த நகரமாக மாற்றுவதற்கான திட்டங்களை முன்வைத்து, தேர்தலை சந்திப்போம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஒரு வேட்பாளராக மதுரையில் மு.க.அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம், நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பேன் என்று கூறினார்.

தொடர்ந்து அவரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் தங்களை சந்தித்து ஆதரவு கேட்டால், ஆதரவு அளிப்பீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் என்னை சந்தித்து பேசியதும் ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுப்பேன் என்றார்.

.