Nithyananda News - நித்தியானந்தா, ஈக்வடார் நாட்டுக்குச் சென்று அங்கு ஒரு தனி தீவை வாங்கி, அதை ‘கைலாசா’ என்னும் நாடாக பிரகடனப்படுத்தியுள்ளார் என்று தகவல்
New Delhi: Nithyananda News - சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் தஞ்சமடைந்ததாக பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், அந்நாட்டு அரசாங்கம், “அப்படியெல்லாம் நாங்கள் அவருக்கு குடியுரிமை கொடுக்கவில்லை,“ என்று தடாலாடியாக தெரிவித்துள்ளது. நித்தியானந்தா, பாலியல் பலாத்காரம், ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்தியாவில் தேடப்படும் நபராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நித்தியானந்தா, ஈக்வடார் நாட்டுக்குச் சென்று அங்கு ஒரு தனி தீவை வாங்கி, அதை ‘கைலாசா' என்னும் நாடாக பிரகடனப்படுத்தியுள்ளார் என்று பரவால பேசப்பட்டு வந்த நிலையில், ஈக்வடார் தூதரகம், “நித்தியானந்தா, எங்களிடம் தஞ்சமடைய விருப்பம் தெரிவித்தது உண்மைதான். ஆனால், நாங்கள் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஹையிதி நாட்டிற்கு அவர் சென்றிருக்கக்கூடும்,” என்று அதிகாரபூர்வமாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்புட்டுள்ளது.
மேலும் ஈக்வடார், “kailasa.org என்னும் இணையதளம் வாயிலாக வெளிவந்துள்ள தகவல்களைத்தான் இந்தியாவில் இருக்கும் ஊடகங்கள் பிரசுரம் செய்து வருகின்றனர். அந்த தகவல்களைக் கொடுப்பது நித்தியானந்தா தரப்பு ஆட்கள்,” எனத் தெரிவித்துள்ளது.
ஒரு புறம் ஈக்வடார் அரசு இப்படி, வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இந்திய அரசு தரப்பு, நாட்டிலிருந்து அவர் முறைகேடாக தப்பித்துச் சென்றிருக்கலாம் என்கிறது. சென்ற மாதம் அவர் இந்தியாவிலிருந்து வேறு நாட்டுக்கு தப்பியோடியிருக்கலாம் என்று யூகிக்கிறது மத்திய அரசு.
இந்த விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ரவிஷ் குமார், “நித்தியானந்தாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்து விட்டோம். புதிய பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பத்தையும் நாங்கள் ரத்து செய்துள்ளோம். இந்தியா சார்பில் வெளிநாடுகளில் இருக்கும் அனைத்து நம் அமைப்புகளிடமும், நித்தியானந்தா குறித்து தகவல் தெரிந்தால் தெரியப்படுத்துமாறு கூறியுள்ளோம். அங்கிருக்கும் அரசாங்கங்களிடமும் உதவி கேட்டு முறையிட்டுள்ளோம்,” என்றுள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு, நித்தியானந்தா ஒரு நடிகையுடன் பாலியல் ரீதியாக சம்பந்தப்பட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் 53 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கில் இதுவரை குற்றம் நிரூபிக்கப்படவில்லை.
அதேபோல கர்நாடாகாவில் நித்தியானந்தா தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சில பெண்கள் புகார் அளித்தனர்.
கடந்த மாதம் குஜராத்தில், சட்டத்துக்குப் புறம்பாக நித்தியானந்தா, குழந்தைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்ற புகார் கொடுக்கப்பட்டது.