கேளம்பாக்கம் செல்ல இ-பாஸ் வாங்கினாரா ரஜினிகாந்த்? எழுந்தது புதிய சர்ச்சை!
ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றாரா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதற்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து முகக்கவசத்துடன் லம்போர்கினி காரை அவரே ஓட்டிச் செல்லும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.
ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு ஓய்வுக்காக சென்றுள்ளார். அவருடன் சவுந்தர்யா அவரது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர் உடன் சென்றிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களும் பின்னர் வெளியானது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம், ரஜினிகாந்த் முறையாக இ-பாஸ் எடுத்து கேளம்பாக்கம் சென்றாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஆணையர் பிரகாஷ், ரஜினிகாந்த் முறையான அனுமதி பெற்று கேளம்பாக்கத்திற்கு சென்றாரா என்பது குறித்தும், சென்னைக்கு மீண்டும் முறையான இ-பாஸ் பெற்று வந்தாரா என்பது குறித்தும் ஆய்வு செய்தே கூற முடியும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சென்னையின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீத மக்களுக்கு விரைவில் சோதனை நடத்தி முடிக்கப்படும் என்றும், மக்கள் அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் ஒருமுறை வெளியே சென்றால் 10 நாளுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.