This Article is From Feb 06, 2019

கட்சியில் இணைய ரஜினி அழைப்பு விடுத்தாரா? விளக்கும் திருநாவுக்கரசர்

கட்சியில் இணைய ரஜினிகாந்த் அழைப்பு விடுத்ததாக பரவும் தகவலில் உண்மையில்லை என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கட்சியில் இணைய ரஜினி அழைப்பு விடுத்தாரா? விளக்கும் திருநாவுக்கரசர்

தனது மகளின் திருமண அழைப்பிதழ் வழங்குவதற்காக சென்னை அண்ணாநகரில் உள்ள திருநாவுக்கரசரின் இல்லத்திற்கு ரஜினிகாந்த் வருகை தந்திருந்தார். அந்த சமயம் திருமாவளவனும் வந்ததால் மூன்று பேரும் சந்தித்துக்கொண்டனர்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் கூறியதாவது, ரஜினிகாந்துக்கும் எனக்கும் 40 ஆண்டுகள் பழக்கம். அவர் என் நெருங்கிய நண்பர். ரஜினிகாந்தின் மகளின் திருமணம் நடைபெறவுள்ளது. எனவே எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அவர் அழைப்பிதழ் தந்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதால், அரசியல் சூழல்கள், நாட்டின் நிலவரம் போன்ற பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம். குறிப்பிட்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்திலே ரஜினிகாந்த் அரசியல் பேசி வருகிறார். ரஜினிகாந்த் அரசியல் கட்சித் தொடங்கினாலும், தொடங்காவிட்டாலும் அவர் மக்களால் மதிக்கப்படும் ஒரு தலைவர் தான்.

இரண்டு அரசியல் தலைவர்களும் சந்தித்தால் அரசியல் பேசாமலா இருப்போம். பேசத்தான் செய்தோம். ஆனால், கட்சியில் இணைய ரஜினிகாந்த் அழைப்பு விடுத்ததாக பரவும் தகவலில் உண்மையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

.