This Article is From Mar 10, 2020

”ஜோதிராதித்ய சிந்தியாவுடன் பேச முடியவில்லை, பன்றிக் காய்ச்சல் என்கிறார்கள்": திக்விஜய சிங்

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் அமைச்சரவையை மாற்றி அமைக்க வசதியாக 20 அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

”ஜோதிராதித்ய சிந்தியாவுடன் பேச முடியவில்லை, பன்றிக் காய்ச்சல் என்கிறார்கள்

நாங்கள் ஜோதிராதித்ய சிந்தியாவை தொடர்புகொள்ள முயற்சித்தோம் என திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • ஜோதிராதித்யாவுடன் பேச முயற்சித்தோம் முடியவில்லை.
  • அவருக்கு பன்றிக்காய்ச்சல் என்று கூறுகின்றனர்.
  • மத்திய பிரதேசத்தில் காங்கிரஸூக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Bhopal, New Delhi:

மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியில் சிக்கலைத் தீர்க்க காங்கிரஸ் தரப்பில் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போதிலும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருக்குப் பன்றிக்காய்ச்சல் எனத் தகவல் தெரிவிப்பதாக திக் விஜயசிங் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்த திக் விஜயசிங் கூறும்போது, நாங்கள் ஜோதிராதித்ய சிந்தியாவைத் தொடர்புகொள்ள முயன்றோம், ஆனால் அவருக்குப் பன்றிக்காய்ச்சல் எனத் தகவல் தெரிவித்தனர். அதனால், அவருடன் பேசமுடியவில்லை என்றார். 

மத்தியப் பிரதேசத்தில் வாக்காளர்களின் ஆணையை யார் அவமதிக்க முயன்றாலும், மக்களிடமிருந்து அவர்களுக்குச் சரியான பதில் கிடைக்கும்... நீங்கள் என்னிடம் கேட்டால் எல்லாம் நன்றாக இருக்கிறது எனக் கூறுவேன் என்றார் திக்விஜய சிங். 

மத்தியப் பிரதேச அரசியலில் பெரும் திருப்பமாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 17 பேர் பெங்களூருவுக்குச் சென்று விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 6 அமைச்சர்களும் அடங்குவர். 

சோனியா காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா தற்போது டெல்லியில் உள்ளார். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கலைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இவை முழு பலன் அளிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சிந்தியா, கடந்த 2018-ல் மத்தியப் பிரதேச முதல்வராக விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் இதனைக் காங்கிரஸ் மேலிடம் ஏற்கவில்லை.

மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் மொத்தம் 230 உறுப்பினர்கள். ஒரு கட்சி ஆட்சியமைக்க 116 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 120 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர். அவர்களில் 114 பேர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். இருவர் பகுஜன் சமாஜையும், ஒருவர் சமாஜ்வாதி கட்சியையும், 4 பேர் சுயேச்சை எம்எல்ஏக்ளும் ஆவார்கள். பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். 2 சட்டமன்ற உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. 

இப்போது 17 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக ஆளும் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்குச் சென்று விட்டனர். அவர்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து மத்தியப் பிரதேச அரசியலில் மாற்றம் ஏற்படும்.

.