This Article is From Feb 04, 2019

'வாஜ்பாய் தாக்கல் செய்த பட்ஜெட்! - மீண்டும் உளறிய திண்டுக்கல் சீனிவாசன்!

பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் வாஜ்பாய் என்று தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதால் சலசலப்பு உண்டானது.

'வாஜ்பாய் தாக்கல் செய்த பட்ஜெட்! - மீண்டும் உளறிய திண்டுக்கல் சீனிவாசன்!

திண்டுக்கல் அருகே நத்தம் பகுதியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடந்தது. அந்த கூட்டத்தில் மாநில வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று பேசும் போது, 'மறைந்த முதல்வர் ஜெயலலிதா பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ.100 வழங்கினார். ஆனால் அதற்கும் மேலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.1000 வழங்கியுள்ளார்.

தற்போது வாஜ்பாய் அறிவித்துள்ள பட்ஜெட் அருமையாக உள்ளது. விவசாயிகளுக்கு பல சலுகைகளை வழங்குகிறது. இந்த பட்ஜெட்டை முதல்வர் பழனிச்சாமி வரவேற்றுள்ளார். பணம் மதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் யாரும் பாதிப்படையவில்லை. இதனால் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள், 100 ரூபாய் தாள்களை கட்டு கட்டாக வைத்திருந்தவர்கள்தான் பாதிக்கப்பட்டனர். மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று பேசினார்.

திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டங்களில், இவ்வாறு பேசுவது என்பது ஒன்றும் புதிதல்ல. வேடசந்தூர் அருகே கல்வார்பட்டியில் நடந்த அரசு விழா ஒன்றில் பேசுகையில், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லிக்கு போய் பிரதமர் நரசிம்மராவுடன் பேசுவார் என்று பேசியது அப்போது சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

.