"பத்த வச்சிட்டியே பரட்ட’ என்பது போல போகிற போக்கில் ரஜினி ஒன்றை சொல்லிவிட்டுப் போயிருப்பது சரியல்ல."
‘துக்ளக்' இதழின் 50வது ஆண்டு விழாவில் ரஜினி, பெரியார் குறித்து பேசியதை அடுத்து, தமிழக அரசியலின் பேசு பொருளாக அது மாறியுள்ளது. ரஜினிக்கு ஆதரவாக வலதுசாரிகள் மற்றும் பாஜகவினர் படையெடுக்க, திமுக, அதிமுக, திராவிட இயக்கங்கள் ரஜினிக்கு எதிராக சீறி வருகின்றன. இந்நிலையில் திமுகவின் திண்டுக்கல் ஐ.லியோனி, கட்சியின் பொதுக் கூட்டம் ஒன்றில், ரஜினி போலவே பேசி விமர்சித்துள்ளார்.
திமுக நிகழ்ச்சியில் பேசிய லியோனி, “ரஜினி சொல்கிறார். துக்ளக் படித்தால் அறிவாளி என்று. முரசொலி படித்தால் திமுககாரன் என்று. நான் ஒன்றை ரஜினியிடம் கேட்கிறேன். ரஜினி படம் பார்ப்பவர்கள் எல்லாம் ரஜினி ரசிகர்கள். ஆனால், கமல்ஹாசனின் படத்தைப் பார்ப்பவர்கள் எல்லாம் அறிவாளிகள். இப்படி நான் சொன்னால், அந்த வாதத்தை ரஜினியால் ஏற்க முடியுமா?
பெரியார் என்பவர் யார். மிகப் பெரும் சமூக சீர்திருத்தவாதி. தமிழக மக்களின் நலனுக்காக இறுதிவரை அயராது பாடுபட்ட ஒப்பற்றத் தலைவர். அவரைப் போன்ற தலைவரைப் பற்றிப் பேசுகையில் சிந்தித்து, நிதானமாக பேச வேண்டாமா. ‘பத்த வச்சிட்டியே பரட்ட' என்பது போல போகிற போக்கில் ரஜினி ஒன்றை சொல்லிவிட்டுப் போயிருப்பது சரியல்ல.
3 ஆண்டுகளுக்கு முன்னர் ரசிகர்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்தார் ரஜினி. அவர்களுக்கு மத்தியில், ‘உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நாளைக்கு சொல்றேன்' என்று முதல் நாளை முடித்தார். இரண்டாவது நாள், ‘மிக முக்கியமான விஷயம்தான். நாளைக்கு அதை அறிவிக்கிறேன்' என்றார் இரண்டாவது நாளிலும் மழுப்பினார். மூன்றாவது நாளில், ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடலாம். அதுவரை உங்கள் வேலையை சென்று பார்த்துக் கொண்டிருங்கள்' என்று அனுப்பிவிட்டார். எல்லாம் அவரவர் வேலைகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை அழைத்து, ‘உங்க வேலையை இப்போ பாருங்க. பிறகு பார்த்துக்கலாம்' என்று கட்சி பற்றி 3 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தார் ரஜினி. இன்று வரையில் கட்சியையே தொடங்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு நபர்தான், இன்று பகுத்தறிவு பகலவன் பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். எதைப் பேசினாலும் அறிந்து, தெரிந்து பேசுங்கள். இது ரஜினிக்கு எனது கனிவான அறிவுரை,” என்று முடித்தார்.
முன்னதாக துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி, “1971 ஆம் ஆண்டு சேலத்தில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் ஒரு பேரணியை நடத்தினார். அதில் கடவுகளான ராமர் மற்றும் சீதா ஆகியோரின் நிர்வாணச் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இது குறித்து எந்த செய்தித் தாள்களும் செய்தி வெளியிடவில்லை. ஆனால், சோ ராமசாமி தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த துக்ளக் இதழ் மட்டும்தான் இது குறித்து செய்தி வெளியிட்டு விமர்சனம் செய்திருந்தது,” என்று சர்ச்சையாக பேசினார்.
துக்ளக் விழாவில் ரஜினி பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து அது குறித்து விளக்கம் கொடுத்த அவர், “1971 ஆம் ஆண்டு பெரியார் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, இல்லாத ஒன்றை நான் பேசிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது. நான் அப்படி எதுவும் பேசவில்லை. இதோ என் கையில் ‘அவுட்லுக்' பத்திரிகையை வைத்துள்ளேன். நான் பேசியதற்குச் சான்றாக இந்த பத்திரிகையிலேயே தகவல்கள் உள்ளன. எனவே, பெரியார் குறித்து பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.