தமிழக போலீஸ், குப்பைக் கிடங்கில் சந்தியாவின் உடல் உறுப்புகளை சுமார் இரண்டு வாரத்துக்கு முன்னர்தான் கைப்பற்றி, வழக்கு தொடர்ந்தது.
ஹைலைட்ஸ்
- இந்த சம்பவம் 2 வாரத்துக்கு முன்னர் வெளிச்சத்துக்கு வந்தது
- அப்போதே வழக்கு தொடர்ந்து விசாரணையை ஆரம்பித்தது போலீஸ்
- வெகு விரைவில் வழக்கின் குற்றவாளியை போலீஸ் கண்டுபிடித்துள்ளது
சென்னையில் உள்ள பெருங்குடி பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கிற்கு சில நாட்களுக்கு முன்னர், குப்பைகள் லாரியில் மூலம் கொண்டு வரப்பட்டது. அப்போது கொட்டப்பட்ட குப்பையில், கை மற்றும் கால்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் இருந்தன. இதைக் கண்டு அங்கு வேலை பார்த்து வந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீஸ், மர்ம சம்பவம் குறித்து விசாரிக்கத் தொடங்கியது.
போலீஸ் விசாரணையில், குப்பையில் இருந்தது ஒரு பெண்ணின் கை மற்றும் கால்கள் என கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து உடல் உறுப்புகளை காவல் துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இப்படி பெண்ணை கண்டந்துண்டமாக வெட்டி, கொலை செய்து குப்பை தொட்டியில் வீசியது யார் என்பதை கண்டுபிடிக்க காவல் துறை விசாரணையை முடுக்கிவிட்டது.
போலீஸின் தீவிர விசாரணையில், உடல் உறுப்புகள் எந்தப் பெண்ணுடையது என்பது தெரியவந்தது. உடல் உறுப்புகளுக்குச் சொந்தமான பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பவருடையது என்றும், அவர் சென்னையின் ஜாஃபார்கான் பேட்டையில் வசித்து வந்தவர் என்றும் தெரியவந்தது. தொடர்ந்து, பெண்ணின் கணவர் பாலகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஒரு கட்டத்தில் போலீஸார், பாலகிருஷ்ணன் மீது சந்தேகப்பட்டு, அவரை கைது செய்து விசாரித்தனர். அவர் தற்போது, குற்றத்தை ஒப்புக் கொண்டதாக நமக்குத் தகவல் வந்துள்ளது. பாலகிருஷ்ணனுக்கும் சந்தியாவுக்கும் இடையிலிருந்து உறவுச் சிக்கலே, விபரீதத்தில் முடிந்துள்ளதாக தெரிகிறது. சந்தியாவின் மீதமுள்ள உடல் பாகங்களை மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக போலீஸ், குப்பைக் கிடங்கில் சந்தியாவின் உடல் உறுப்புகளை சுமார் இரண்டு வாரத்துக்கு முன்னர்தான் கைப்பற்றி, வழக்கு தொடர்ந்தது. புலன் விசாரணை செய்ய இந்த வழக்கு மிகவும் சிரமமானதாக இருக்கும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் இரண்டே வாரத்தில் கொலை குற்றவாளியை கண்டுபிடித்துள்ளது போலீஸ்.
இது குறித்து சென்னை மாநகர ஆணையர் விஸ்வநாதன் கூறுகையில், ‘இரண்டு விஷயங்கள் இந்த புலன் விசாரணையில் எங்களுக்குக் கை கொடுத்தது. ஒன்று குப்பைக் கிடங்கிலிருந்து சந்தியாவின் துண்டிக்கப்பட்ட கையில் இருந்த டாட்டூ. இதையடுத்து, சமீபத்தில் எந்த இடங்களில் இளம் பெண்கள் மாயமானார்கள் என்ற தகவல்களை எடுத்தோம். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்ததில், துண்டிக்கப்பட்ட கையானது சந்தியாவினுடையதுதான் என்று எங்களுக்குத் தெரிந்தது. தொடர்ந்து சந்தியாவின் கணவரிடத்தில் விசாரிக்கும்போது, உண்மை வெளிவந்துவிட்டது' என்று விளக்கினார்.