This Article is From Apr 02, 2019

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்!

இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்!

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இயக்குநர் மகேந்திரனுக்கு சிறுநீரக கோளாறு ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர் தொடர் தீவிர சிகிச்சை பிரிவில் முழு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு டையாலிசிஸ் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் காலாமானார். அவருக்கு வயது 79. இயக்குநர் மகேந்திரன் மறைவு தமிழ் திரையுலகினர் மற்றும் தமிழக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1978-ம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர் மகேந்திரன். தொடர்ந்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை இயக்கியவர்.

யதார்த்த சினிமாவின் இயக்குநர் என வர்ணிக்கப்படும் இயக்குநர் மகேந்திரன், நீண்ட காலமாக சினிமாவில் இருந்து விலகி காணப்பட்டார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடிகர் விஜய்யின் தெறி, ரஜினிகாந்தின் பேட்ட உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்து திரையில் தோன்றி வந்தார்.

.