This Article is From Jul 25, 2018

மாறன் சகோதரர்கள் மீதான டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கில் குற்றப்பத்திரிகை; நீதிமன்றம் அதிரடி!

டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கில் கடந்த மார்ச் மாதம் மாறன் சகோதரர்களை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது

மாறன் சகோதரர்கள் மீதான டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கில் குற்றப்பத்திரிகை; நீதிமன்றம் அதிரடி!
Chennai:

முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது பதியப்பட்டுள்ள டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கில் கடந்த மார்ச் மாதம் மாறன் சகோதரர்களை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாறன் சகோதரர்களை விடுவித்தது செல்லாது என்று கூறிய உயர் நீதிமன்றம், 12 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யச் சொல்லியும் உத்தரவிட்டுள்ளது.

தயாநிதி மாறன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது, கடந்த 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை சென்னை, போட் கிளப்பில் இருக்கும் தனது வீட்டில் சட்டத்துக்குப் புறம்பாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. இப்படி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்ததால், அரசுக்கு 1.78 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும், இந்த டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சன் டிவி-யின் வியாபாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாததால் கடந்த மார்ச் மாதம் சிபிஐ நீதிமன்றம், மாறன் சகோதரர்களை வழக்கில் இருந்து விடுவித்தது. 

சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தயாநிதி மாறன், ‘நீதி வென்றது. இந்த வழக்கால் நான் நிறைய இழந்தேன். மத்திய அமைச்சராக இருந்த நான் பதவியை ராஜினாமா செய்தேன். அடுத்த வந்த தேர்தலில் தோற்றுப் போனேன். இந்தத் தீர்ப்பினால், கட்சிக்கு ஊக்கம் கிடைக்கும். எனக்கு நீதியின் மீது என்றுமே நம்பிக்கை உள்ளது’ என்று பேசினார். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. 
 

.