டிஸ்கவரி சேனலில் 'மேன் vs வைல்டு' (Man Vs Wild) என்ற நிகழ்ச்சியை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் கடந்து வந்திருப்போம். இந்த நிகழ்ச்சி நம் வாழ்வில் ஒரு பகுதியாக இருந்த, இருப்பதற்கான காரணம், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் (Bear Grylls). அவர் ஆங்கிலத்தில் எப்படி பேசியிருந்தாலும், 'அது ஒரு ஆபத்தான பகுதி', 'அது ஒரு ஆபத்தான மிருகம்', 'எல்லாரும் தாழ்வான பகுதிய நோக்கி ஓடுங்க' என்ற மாதிரியான தமிழ் டப்பிங் வசனங்கள் இந்த நிகழ்ச்சியின் மீது ஒரு ஆர்வத்தை நமக்குள் ஏற்படுத்தியது என்பது ஒரு நிதர்சனமான உண்மை. இந்த வசனங்களை, நம் அன்றாட வாழ்வில் நிச்சயம் ஒரு முறையாவது கடந்து வந்திருப்போம், பயன்படுத்திக்கூட இருந்திருப்போம்.
யாரும் இல்லாத காட்டில் நுழைந்து, அங்குள்ள சிரமங்களை கடந்து, ஏற்படும் பிரச்னைகளை சமாளித்து உயிர் பிழைப்பது எப்படி என்பது பற்றிய ஒரு தொகுப்புதான் இந்த 'மேன் vs வைல்டு' நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்.
எப்போதும், பியர் கிரில்ஸ் மற்றும் அவருடைய கேமராமேன் என இருவர் மட்டுமே காட்டிற்குள் பயணிக்கும் இந்த பயணத்தில் தற்போது மற்றோருவரும் இணைந்துள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் முக்கிய மனிதர்தான் அவர்.
இந்தியாவின் பிரதமர் யார் என்பது உலக நாடுகள் அறிந்ததே. நரேந்திர மோடி (PM Narendra Modi) தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக சமீபத்தில்தான் பதிவியேற்றார். தனது முதல் ஆட்சியில், உலகின் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலகம் சுற்றும் வாலிபனாக வலம் வந்தார். இம்முறை தனது திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள பிரதமர், மாறுதாலாக காடுகளுக்குள் பயணம் மேற்கொண்டுள்ளார். அதுவும், நம் சிறு வயது நாயகன் பியர் கிரில்ஸுடன் 'மேன் vs வைல்ட்' நிகழ்ச்சியில்.
டிஸ்கவரியில் ஒளிப்பரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சி பற்றிய ப்ரோமோ ஒன்றை பியர் கிரில்ஸ் தனது சமுக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,"இதுவரை யாரும் பார்த்திறாத பிரதமர் மோடியின் மறுபக்கத்தை காண 180-திற்கும் மேற்பட்ட நாட்டு மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. விலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் இந்திய வனப்பகுதிக்கு செல்லவுள்ளார்" என கூறியுள்ளார்.
பிரதமர் மோடியுடன் இந்திய காடுகளில் பியர் கிரில்ஸ் மேற்கொண்டுள்ள பயணத்தின் தொகுப்பு, 'மேன் vs வைல்டு' டிஸ்கவரி (Discovery Channel India) தொலைக்காட்சியில், ஆகஸ்ட் 12 அன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
'வெல்கம் டூ இந்தியா' (Welcome to India) என்ற இந்திய பிரதமரின் வரவேற்புடன் துவங்கிய இந்த ப்ரோமோ காணொளி, 'நீங்கள் இந்த நாட்டின் முதல் மனிதர், உங்கள் உயிரை பாதுகாப்பது என் முதல் கடமை' என்ற பியர் கிரில்ஸின் வார்த்தைகளுடன் முடிவடைந்தது.
பியர் கிரில்ஸ் வெளியிட்ட அந்த ப்ரோமோ காணொளி இதோ!
பிரதமர் மோடி பியர் கிரில்ஸஸுடன் இந்திய காடுகளுக்குள் மேற்கொண்ட பயணம், 'மேன் vs வைல்டு' நிகழ்ச்சியை ஆகஸ்ட் 12 அன்று இரவு 9 மணிக்கு டிஸ்கவரி தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.