மூன்றாண்டு சிறைத் தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியை எவ்விதக் காலதாமதமும் இன்றி அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
ஒரே நாளில் இருபெரும் தலைகுனிவுச் சம்பவங்கள் தமிழக அதிமுக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்றன. இன்று விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றம் மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கியிருக்கிறது.
உயர்கல்வித்துறையின் செயலாளர் மங்கத் ராம் சர்மாவைக் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகர காவல் துறை கமிஷனருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதன்பிறகும் இருவருமே இந்த நிமிடம் வரை பதவியில் நீடித்துக் கொண்டிருப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்வளவுக்குப் பிறகும்,இந்த இருவரையும் நியமனம் செய்த முதல்வரும் அவர்களை அமைச்சர் பொறுப்பிலிருந்தும், உயர்கல்வித்துறை செயலாளர் பொறுப்பிலிருந்தும் விடுவிக்காமல் ஒன்றுமே நடக்காததைப்போல வேடிக்கை பார்ப்பதும், முதல்வரின் பரிந்துரையின் பேரில் அமைச்சரை நியமித்த ஆளுநரும் பொறுமையுடன் அமைதி காப்பதும், அரசியல் சட்டம் அதிமுக ஆட்சியில் பலவீனப்படுத்தப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.
ஆகவே மூன்றாண்டு சிறை தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி எவ்விதக் காலதாமதமும் இன்றி அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். தகுதியை இழந்த ஒருவர் இனி பதவியில் தொடருவது அமைச்சரவைக்கே அவமானம் மட்டுமல்ல, தமிழகத்தின் மீது பூசப்படும் அசிங்கம்.
உயர் நீதிமன்றமே கைது செய்ய உத்தரவிட்ட பிறகும் உயர் கல்வித் துறைச் செயலாளரை அப்பதவியில் நீடிக்க அனுமதிப்பது ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய கல்வித்துறைக்கு பேரிழுக்கு என்பதால் அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இவற்றை செய்யத் தவறினால், ஆளுநர் தலையிட்டு சிறை தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சிபிஐ முன்பு ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கர், சிபிஐ ரெய்டுக்குள்ளான டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உள்பட அத்தனை பேரையும் நீக்கி, தடம் மாறி தடுமாறிக் கொண்டிருக்கும் மாநில அரசு நிர்வாகத்தைக் காப்பாற்ற வேண்டும்.
மக்களாட்சி மாண்பின் சிகரமாகத் திகழ வேண்டிய அமைச்சரவையின் புனிதத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : சிறை தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா!