காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
New Delhi: பிரபலங்கள் 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்த விவகாரம் தன்னை மிகுந்த கலக்கமடைய செய்துள்ளது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக, இயக்குனர் மணிரத்னம், திரைப்பட தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, பிரபல வங்காள திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, நடிகை ரேவதி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி, நடிகரும், இயக்குனருமான அனுராக் காஷ்யாப் உள்பட முக்கியமான பிரபலங்கள் 49 பேர் அந்த கடிதத்தை மோடிக்கு எழுதினர். அந்த கடிதத்தில் அவர்கள் கூறியதாவது,
எங்கள் அன்பான இந்திய நாட்டில் சமீபகாலமாக பல்வேறு சோக சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை பார்க்கும்போது, அமைதியை விரும்பும் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்ளும் எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.
‘ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷத்தை ஆயுதமாக்கி சிறுபான்மையினருக்கு எதிராக பல வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இவற்றை தடுக்க நீங்கள் (பிரதமர்) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கும்பலாக சேர்ந்து அடித்து கொல்லும் சம்பவங்களை நாடாளுமன்றத்தில் நீங்கள் கண்டித்தீர்கள். அது போதாது. அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
ராமர் பெயரில் சிறுபான்மையினரை பயமுறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துங்கள். கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை. எனவே, கருத்து வேறுபாடு கொண்டவர்களை ‘தேசத்துக்கு எதிரானவர்கள்' என்றும், ‘நகர நக்சல்கள்' என்றும் முத்திரை குத்திவிடக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அங்குள்ள மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், “49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் நாட்டின் தோற்றத்தை அவமானப்படுத்துவது போன்று இருக்கிறது. பிரதமர் மோடியின் பணியையும், செயலையும் குறைத்து மதிப்பிடுவது போல் இருக்கிறது. அதனால், அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார்.
இதைத்தொடர்ந்து, மூசாபர்பூர் நீதிபதி தலைமை நீதிபதி, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் 49 பேர் மீதும் தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பீகார் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் பிரதமருக்கு 2 பக்க கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தை அவர் தனது சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் கூறியதாவது, சட்டப்பிரிவு 19-ன் அரசியலமைப்பு கொள்கையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.
2016ல் பிரதமர் மோடி அமெரிக்காவில் ஆற்றிய ஒரு முக்கிய உரையை நினைவுபடுத்தினார், அதில் பிரதமர் அரசியலமைப்பை "புனித புத்தகம்" என்று குறிப்பிட்டு"... பேச்சு சுதந்திரம்... மற்றும் அனைத்து குடிமக்களின் சமத்துவம், பின்னணியைப் பொருட்படுத்தாமல், அடிப்படை உரிமைகளாகக் கருதப்படுகின்றன என்று கூறினார்".
இந்திய குடிமக்கள் என்ற வகையில், நாம் ஒவ்வொருவரும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை அச்சமின்றி உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர முடியும் என்று நம்புகிறோம், இதன்மூலம் அவற்றை நிவர்த்தி செய்ய நீங்கள் முன்னிலை வகிக்க முடியும். கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை நீங்களும் ஆதரிப்பீர்கள் என்று நாங்கள் நம்ப விரும்புகிறோம், எனவே 'மான் கி பாத்' ... 'மவுன் கி பாத்' ஆகாது, "என்று சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கருத்து வேறுபாடு இல்லாத ஜனநாயகம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், உங்களைப் பற்றி விமர்சிக்கும் அல்லது எதிர்க்கும் கருத்துக்களைக் கொண்டவர்கள் எதிரிகளாகவோ அல்லது தேச விரோதிகளாகவோ கருதப்படக்கூடாது, "என்று அவர் கூறியுள்ளார்.