சைக்கிளில் சாமானியனாக வரும் மாவட்ட ஆட்சியர் நாராயண ரெட்டி.
அரசு மருத்துவமனை, அலுவலகங்களில் சாதாரண மக்களைப் போல சைக்கிளில் வந்து திடீர் ஆய்வுகளை நடத்துகிறார் ஒருவர். அவர் மாவட்ட ஆட்சியர் என்று அறிந்த பின்னர், அந்த இடத்தில் பணிகள் வேகம் எடுக்கின்றன. திடீர் திடீர் சைக்கிள் ஆய்வுகளால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்கள் பரபரப்பில் காணப்படுகிறது.
தெலங்கானா மாநிலம் நிஜமாபாத் மாவட்டத்தில்தான் இந்த சம்பவங்கள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான சி. நாராயண ரெட்டி, கடந்த 24-ம்தேதி நிஜாமாபாத் மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
சைக்கிளில் சாதாரண மக்களைப் போல வலம் வரும் அவர், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டார். அவர் கலெக்டர் என்பதை அறிந்த பின்னர், அங்கு பணிகள் வேகம் எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தனது ஆய்வின்போது அதிகாரிகளையோ, பாதுகாவலர்களையோ அழைத்துச் செல்வது கிடையாது. சிங்கிளாக சென்று ஆய்வுகளை டீல் செய்கிறார் இந்த கலெக்டர்.
அதிகாலையில் அரசு மருத்துவமனையில் கலெக்டர் நடத்திய ஆய்வின்போது அங்கு சில மருத்துவர்கள் ஆப்சென்ட்டில் இருந்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு மெமோ பறந்துள்ளது. இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர், அரசு மருத்துவமனைகள் சிறப்பான சேவையை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
கலெக்டர் நாராயண ரெட்டி ஆய்வு மேற்கொள்ளும் காட்சிகளும், சைக்கிளில் செல்லும் காட்சிகளும் வைரலாகி வருகிறது.
முன்பு முளுக் மாவட்டத்தின் கலெக்டராக நாராயணரெட்டி பொறுப்பில் இருந்தார். அப்போது, பிளாஸ்டிக்குக்கு மாற்றமாக அரசி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இதன்படி, ஒரு கிலோ பிளாஸ்டிக்கை கொண்டு வருவோருக்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும். இதன் அடிப்படையில் சுமார் 45 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டது.
இதுபோன்ற கலெக்டர் நாராயண ரெட்டியின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சர்ப்ரைஸ் சைக்கிள் விசிட் தொடரும் என நிஜாமாபாத் மாவட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.