செப்டம்பர் 3 ஆம் தேதி சிவக்குமார் கைது செய்யப்பட்டார்
பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக காங்கிரஸின் முக்கிய புள்ளி டி.கே.சிவக்குமாரின் (DK Shivakumar) அமலாக்கத் துறை கஸ்டடி மேலும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது டெல்லி நீதிமன்றம். சிவக்குமாரின் ஆரோக்கியத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டே விசாரணை செய்யப்பட வேண்டும் என்று அமலாக்கத் துறைக்குக் கூறியுள்ளது நீதிமன்றம்.
கடந்த 9 நாட்களாக சிவக்குமார் அமலாக்கத் துறையின் பிடியில் இருக்கிறார். அவர் சார்பில் இன்று ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “சிவக்குமாருக்கு ரத்த கொதிப்பு உள்ளது. 9 நாட்கள் விசாரணை முடிந்துள்ளதால் அவரை பிணையில் விடுவிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வீதம், சுமார் 100 மணி நேரம் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன” என்று வாதாடினார்.
அதே நேரத்தில் அமலாக்கத் துறை, சிவக்குமாரின் கஸ்டடியை நீட்டிக்கச் சொல்லி நீதிமன்றத்தில் முறையிட்டது. தனது வாதத்தின் போது அமலாக்கத் துறை, “விசாரணையின்போது சிவக்குமார் சரியாக ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை” என்றது. அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ் ஆஜரானார்.
சிவக்குமார் தரப்பு வழக்கறிஞர் சிங்வி, சரவண பவன் உரிமையாளர் எப்படி ரத்தக் கொதிப்பால் கஸ்டடியில் இருக்கும்போது இறந்தார் என்பதை மேற்கோள் காட்டினார். இதைத் தொடர்ந்து நீதிமன்றம், வரும் திங்கட்கிழமைக்குள் சிவக்குமாரின் பிணை மனு குறித்து பதிலளிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், சிவக்குமாரின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டுதான் விசாரணை செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறையிடம் தெரிவித்துள்ளது டெல்லி நீதிமன்றம்.
கடந்த 2017 ஆகஸ்டில் சிவகுமாருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதில் கணக்கில் வராத ரூ. 300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.