அதிமுக மாநிலங்களவை எம்.பி பதவியை தேமுதிகவுக்கு வழங்குமா?
ஹைலைட்ஸ்
- அதிமுக கூட்டணி தர்மத்தை காத்து எம்.பி பதவி தருவார்கள் என நம்புகிறோம்
- தேமுதிக கூட்டணி தர்மத்தை கடைப்படிக்கிறது.
- அதிமுக தலைமை தான் முடிவு செய்யும் - எடப்பாடி
அதிமுக கூட்டணி தர்மத்தை மதித்து தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியைத் தரும் என எதிர்பார்ப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதனால், அதிமுக மாநிலங்களவை எம்.பி பதவியை தேமுதிகவுக்கு வழங்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவி காலியாகிறது. இதற்கான தேர்தல் வரும் மார்ச் மாத 26ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக, திமுக தலா 3 எம்.பி.க்களை தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது. இதனால் கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கான எம்.பி. பதவியைப் பெற முயல்கின்றன.
அந்தவகையில், அதிமுக கூட்டணியில் கடந்த முறை பாமகவின் அன்புமணி ராமதாஸுக்கு எம்.பி. பதவி அளிக்கப்பட்டது. அதேபோல், திமுகவில் வைகோவுக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் ஒன்றில் போட்டியிடும் வாய்ப்பை அதிமுக தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, தேமுதிக கூட்டணி தர்மத்தை எப்போதும் கடைப்பிடிக்கின்ற கட்சி. முதல்வரும் கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிப்பார் என எதிர்பார்க்கிறோம்.
கூட்டணி முடிவானபோதே, மாநிலங்களவை எம்.பி குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. தேமுதிகவுக்கு, மாநிலங்களை எம்.பி பதவி வழங்கப்படுமா என்பது குறித்துப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி தருவது குறித்து தலைமைக் கழகமே முடிவு செய்யும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். எம்.பி பதவியை கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு; ஆனால் முடிவெடுப்பது அதிமுக தலைமைதான் என முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.