This Article is From Mar 06, 2019

‘துரைமுருகனோடு எப்போது பேசினோம்..?’- தேமுதிக சுதீஷ் பதில்

தேமுதிக-வின் துணைச் செயலாளர் சுதீஷ் இன்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தனியார் ஓட்டலில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

‘துரைமுருகனோடு எப்போது பேசினோம்..?’- தேமுதிக சுதீஷ் பதில்

விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியிலும் சேராமல் மதில் மேல் பூனையாக இருந்து வருகிறது.

தேமுதிக-வின் துணைச் செயலாளர் சுதீஷ் இன்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தனியார் ஓட்டலில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டணி குறித்தான ஆலோசனையை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், ‘எப்போது துரைமுருகனுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்?' என்ற ரகசியத்தைத் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியிலும் சேராமல் மதில் மேல் பூனையாக இருந்து வருகிறது. தேமுதிக, திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடையே கடந்த இரண்டு வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் திமுக, நேற்று தொகுதிப் பங்கீட்டை மொத்தமாக முடித்து விட்டது. அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினும், ‘கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிப் பங்கீடு முடித்துவிட்டோம். 20 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும். மீதமுள்ள 20 தொகுதிகளில் நாங்கள் களமிறங்குவோம்' என்று அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் தேமுதிக-வுக்கு கூட்டணிக் கதவை அடைத்தது திமுக.

இந்நிலையில் இன்று வண்டலூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பழனிசாமி, கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேடையிலும் விஜயகாந்த் படம் பொறிக்கப்பட்டது. இது பெரும் சலசலப்பை உண்டாக்கியது. 

இப்படிப்பட்ட சூழலில்தான் தேமுதிக-வினர், துரைமுருகனை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தனர். சந்திப்பு முடிந்ததை அடுத்து துரைமுருகன், ‘தேமுதிக நிர்வாகிகள் மீண்டும் கூட்டணியில் வருவது குறித்துதான் பேசினர். எங்களுக்கும் அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது. இனி கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டேன்' என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மத்திய அமைச்சர் கோயலுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு சுதீஷ், ‘பாஜக-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதில் எந்த சுணக்கமும் இல்லை. இழுபறி என்று சொல்வதை நம்ப வேண்டாம். இன்னும் ஓரிரு நாளில் நாங்கள் முடிவை அறிவிப்போம்' என்று கூறினார். 

மேலும் அவர், ‘அதிமுக- பாமக இடையில் தேர்தல் உடன்படிக்கை கையெழுத்தான அதே நாளில்தான் நாங்கள் திமுக பொருளாளர் துரைமுருகனுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்' என்றார்.

.