This Article is From Feb 09, 2019

‘திமுக கூட்டணிக் கட்சிகள் அதிமுக-வுக்குத் தூது!’- பகீர் கிளப்பும் ஜெயக்குமார்

அதிமுக கூட்டணியில், பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

‘திமுக கூட்டணிக் கட்சிகள் அதிமுக-வுக்குத் தூது!’- பகீர் கிளப்பும் ஜெயக்குமார்

அதிமுக கூட்டணி குறித்து இன்னும் எந்த அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை. 

ஹைலைட்ஸ்

  • அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற அதிக வாய்ப்புள்ளது
  • மதிமுக, விசிக கட்சிகள் திமுக-வில் இணைய வாய்ப்பு அதிகம்
  • அமமுக தனித்துப் போட்டியிடும் எனத் தெரிகிறது

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற, திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தூது விட்டுள்ளன என்று தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பகீர் கிளப்பும் தகவலை தெரிவித்துள்ளார். 

தற்போது திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சி மட்டும்தான் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட சிறிய கட்சிகளும் திமுக-வுடன் தொடர்ந்து நட்புடன் இருந்து வருகிறது. இந்தக் கட்சிகளும் விரைவில் திமுக கூட்டணியில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் திமுக-வுக்கு தொகுதி பங்கீடுப் பிரச்னை வரும் என்று தெரிகிறது. 

அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில், பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், தேமுதிக மற்றும் சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணி குறித்து இன்னும் எந்த அதிகாரபூர்வ முடிவும் வரவில்லை. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா. அந்தக் கூட்டணியிலிருந்து எங்கள் கட்சித் தலைமையிலான கூட்டணியில் இணைய பலர் தூது விட்டு வருகின்றனர். எந்தக் கட்சி தூது விட்டது என்பது குறித்தெல்லாம் எங்களால் இப்போது சொல்ல முடியாது. அது ரகசியம்' என்று சூசகமாக பதில் அளித்துள்ளார்.


 

.