This Article is From Apr 27, 2019

தங்கமங்கை கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கமங்கை கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவிற்காக ஓடிய தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் வென்றார்.

திருச்சி அருகே உள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் கோமதி. பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவரை கிடைக்காத மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து வந்து தங்கப் பதக்கம் வென்ற கோமதிக்கு பல்வேறு தரப்பினரும், பெரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதுதவிர சமூக வலைத்தளங்களிலும் கோமதி மாரிமுத்துக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. முதல் நபராக நடிகர் ரோபோ சங்கர், வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை வழங்கினார்.

இந்நிலையில் தங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். மென்மேலும் அவர்களது சாதனைகள் தொடர வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

அத்துடன், வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜுவுக்கு திமுக சார்பில் 5 லட்சம் பரிசாக வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளார். இதுதவிர கோமதி மாரிமுத்துவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பாக 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.