இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்- அமித்ஷா
'இந்திய நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சில நாட்கள் முன்னர் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழக எதிர்க்கட்சியான திமுக, வரும் 20 ஆம் தேதி மாவட்டங்களின் அனைத்துத் தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, அமித்ஷா தனது ட்வீட்டர் பதிவில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம்.
தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்,' எனக் கூறியிருந்தார்.
அமித்ஷா, கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து அது குறித்து விவாதிக்க திமுக-வின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நேற்று மாலை கூடியது.
அந்தக் கூட்டத்தின் முடிவில், “நாட்டின் பொருதாராச் சரிவு, வேலை வாய்ப்புகள் இழப்பு, காஷ்மீர் பிரச்னை போன்ற முக்கியமான பிரச்னைகளிலிருந்து இந்திய மக்களின் கவனத்தைத் திசை திருப்பிடும் திட்டத்துடன் “இந்தியாவின் அடையாளமாக ஒரேயொரு மொழி இருக்க வேண்டும். இந்தி மொழிதான் அந்த அடையாளத்தைக் கொடுக்கும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
அன்னைத் தமிழுக்கும் பிற மாநிலத்தவரின் தாய் மொழிகளுக்கும் இந்தி ஆதிக்கத்தால் ஏப்டும் பாதிப்பை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு பெரியார், பேரளிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் வழியில் தாய்மொழி காக்கும் தி.மு.கழகத்திற்கு இருக்கிறது. பாஜக அரசின் நச்சு எண்ணத்தை வளரவிட்டால் அது விஷ விருட்சமாகி இந்திய ஒருமைப்பாட்டை சிதைத்துவிடக் கூடிய ஆபத்து இருப்பதை உணர்ந்து முதற்கட்டமாக திமுக வரும் வெள்ளிக் கிழமை காலை 10 மணி அளவில், தமிழகத்தில் உள்ள வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் ‘மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்' எனும் களம் காணுமென இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மானிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.