This Article is From Mar 31, 2019

திமுகவின் ’ப்ளூ ஸ்கை ஆப்ரேஷன்’! - ஜெயக்குமார் பகீர் தகவல்

ப்ளூ ஸ்கை ஆப்ரேஷன் என்ற பெயரில் மக்களை விலைக்கு வாங்க திமுக திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் பகீர் தகவல் அளித்துள்ளார்.

திமுகவின் ’ப்ளூ ஸ்கை ஆப்ரேஷன்’! - ஜெயக்குமார் பகீர் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் நேற்று அதிகாலையில் சோதனை நடத்தினர். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார்.

இதற்காக வாக்களர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் உள்ளிட்ட பரிசுபொருட்கள் துரைமுருகன் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் துரைமுருகன் வீட்டில் இருந்த எந்த ஒரு ஆவணங்களோ, பணமோ எதுவும் கைப்பற்றபடவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் வருமானவரித்துறை சோதனை குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ப்ளூ ஸ்கை ஆப்பரேஷன் என்ற பெயரில் தொகுதி ஒன்றிற்கு நூறு கோடி வீதம் 20 தொகுதிகளுக்கு இரண்டாயிரம் கோடி செலவு செய்து மக்களை விலைக்கு வாங்க திமுக திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையிலேயே துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்றிருக்கலாம் என்று அவர் பகீர் கிளப்பியுள்ளார்.


 

.