This Article is From Jan 16, 2019

வைரமுத்து நெருக்கமாக இருக்கும் திமுகவே மதுவை கொண்டு வந்தது: ஜெயக்குமார் பதிலடி

மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது அரசின் தீர்க்கமான கொள்கை, அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 

வைரமுத்து நெருக்கமாக இருக்கும் திமுகவே மதுவை கொண்டு வந்தது: ஜெயக்குமார் பதிலடி

வைரமுத்து நெருக்கமாக இருக்கும் திமுக தான், தமிழகத்தில் மதுவை கொண்டு வந்தது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழக அரசு வருமானம் பெறுவதற்கு 20% மக்கள் போதையில் மயங்கி கிடக்க வேண்டுமா? இன்று கிராமத்தில் முதியவர்கள் இல்லை, 50 வயதுக்குள் மது பழக்கத்தினால் மாண்டு போகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது கிராமத்தில். 

தமிழர்களை மாய்த்துவிட்டு தமிழினத்தை எப்படி காப்பீர்கள்? இந்த கருத்தை நான் தமிழர்களின் குடும்பங்களின் சார்பில், தமிழ்நாட்டு பெண்களின் சார்பில், தமிழ்நாட்டு குழந்தைகளின் சார்பில் நான் முன்வைக்கிறேன். 

தற்போது இருக்கும் அரசும், இனி வருகிற அரசும் மதுவை ஒழிப்பதற்காக அல்லது படிப்படியாக குறைப்பதற்கான திட்டங்களை முன்வைக்க வேண்டும் என அவர்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன் என வைரமுத்து கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், வைரமுத்து கருத்திற்கு பதில் தெரிவிக்கும் வகையில் கூறியதாவது, 

தமிழகத்தில் மதுவை கொண்டு வந்தது, வைரமுத்து நெருக்கமாக இருக்கும் திமுக தான். மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது அரசின் தீர்க்கமான கொள்கை, அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 

ஆனால், ஒரேநாளில் இதை நிச்சயம் செய்ய முடியாது. முழுமையான அளவிற்கு மது இல்லாத சமூகம் இருக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கமும், அனைவரின் எண்ணமும் கூட என்று அவர் கூறியுள்ளார். 

.