This Article is From Apr 13, 2019

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! - செந்தில் பாலாஜி போட்டி

4 தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! - செந்தில் பாலாஜி போட்டி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 10ம் தேதி வெளியானது.

இதில், தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிளிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதில், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்ததால், அந்த தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியது. அதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 18 தொகுதிகளுடன் சேர்த்து 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தின.

இதே கோரிக்கையுடன் திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்றும் தேர்தல் ஆணையமே அதனை முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

இதனிடையே, சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ், கடந்த மாதம் 21-ந் தேதி மாரடைப்பால் காலமானார். அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. எனவே, இடைத்தேர்தல் நடத்த வேண்டிய காலியிடங்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

தொடர்ந்து, இடைத்தேர்தல் நடத்த முட்டுக்கட்டையாக இருந்த வழக்குகள் முடிவுக்கு வந்தன. இதைத்தொடர்ந்து, காலியாக உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்தது. மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும், மே19-ந் தேதி, அன்று இந்த 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட 4 தொகுதிகளுக்கும் திமுக இன்று வேட்பாளர்களை அறிவித்தது. 4 தொகுதிக்குமான வேட்பாளர்கள் பெயர்களை அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன்படி, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட டாக்டர்.சரவணன் மீண்டும் போட்டியிடுகிறார்.

சூலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி போட்டியிடுகிறார்.

ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் எம்.சி.சண்முகையா போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இடைத்தேர்தல் முக்கியமானதாக மாறியிருக்கும் நிலையில், திமுக அதன் வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.