நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழகத்தின் சார்பில் மொத்தம் 18 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் கனிமொழி (திமுக), கே.ஆர்.அர்ஜூனன் (அதிமுக), ஆர்.லட்சுமணன் (அதிமுக), வி.மைத்ரேயன் (அதிமுக), டி.ரத்தினவேல் (அதிமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ஆகிய 6 பேரின் பதவி காலம் இம்மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே தமிழகத்தில் இருந்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்காக வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மேலும் 8-ந் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி மு.சண்முகம், பி.வில்சன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மறுமலர்ச்சி திமுகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். மு.சண்முகம் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையில் பொதுச்செயலாளராக உள்ளார்.
பி.வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மெரினா கடற்கரையில் கலைஞரை அடக்கம் செய்ய அரசு இடம் தர மறுத்த நிலையில், நீதிமன்றத்தை நாடி வெற்றி தேடித்தந்ததில் வில்சனின் பங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.