Chennai: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அடுத்த மாதம் 18 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாகியுள்ளது.
சமூக நிலை அடிப்படையிலேயே இடஒதுக்கீடு வழங்க வேண்டும், பொருளாதார நிலையை அடிப்படையாக கொண்டு அல்ல என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறி திமுக சார்பில் அக்கட்சி எம்.பி ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்புரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், “எந்த ஆய்வும் இல்லாமல் இந்த இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.
இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர திமுகவுக்கு முகாந்திரம் இல்லை. நாடாளுமன்றத்தில் சட்டத்தை தடுக்க முடியாததால் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இதனை பொதுநல வழக்காக கருத முடியாது என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு முதற்கட்ட வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய அரசு, இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.