தி.மு.க தலைவரும், 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி உடல் நலக் குறைவால் காலமானார். கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று உயிருக்கு போராடி வந்தவரின் இறுதி மூச்சு இன்று நின்றது. அவரது உயிர் பிரியும் கடைசி காலத்தில் மு.க.ஸ்டாலின், கனி மொழி, மு.க.அழகிரி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 -ம் நாளான நேற்று (ஆகஸ்ட் 6-ம் தேதி) மாலை கருணாநிதியின் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உள் உறுப்புகளை சகஜ நிலையில் வைத்திருப்பதுதான் சவாலாக இருக்கிறது என்றும், 24 மணி நேரம் பொறுத்துதான் எதுவும் செல்ல முடியும் என்றும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த அறிக்கையை அடுத்து இரவு முதலே, காவேரி மருத்துவமனையில் தி.மு.க தொண்டர்கள் குவியத் தொடங்கினர். இரவு முழுவதும் அவர்கள் அங்கேயே இருந்து, கருணாநிதியின் உடல் நலம் பெற வேண்டிக் கொண்டிருந்தனர்.
ஆனால், அவர்கள் வேண்டுதல்களை பொய்யாக்கி விட்டு இன்று மாலை காலமானார் கலைஞர் கருணாநிதி. மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி கருணாநிதி காலமானதாக காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அனைத்து முயற்சிகளையும் எடுத்த போதும், அவரது உடல் ஒத்துழைக்கவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
95 ஆண்டுகள் தமிழகத்தின் நலனுக்காகவும், தமிழுக்காகவும் ஓய்வின்றி பேசிய அந்த கரகரக் குரல் இன்று ஓய்வு பெற்றது. போய்வா ஆதவா!