This Article is From May 31, 2019

'பதவியேற்ற மறுநாளே தமிழகத்திற்கு விரோதமாக செயல்படும் மோடி அரசு' - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement
இந்தியா Written by

தமிழக நலனுக்கு எதிராக மோடி அரசு செயல்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கும் மத்திய அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தேர்தல் முடிந்து தமிழகத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி வரலாறு காணாத தோல்வியடைந்த பிறகு - குறிப்பாக முதலமைச்சரின் மாவட்டத்திலேயே தோற்ற பிறகு - எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இப்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது தமிழக மக்களுக்குச் செய்யும் மன்னிக்க முடியாத துரோகம். ஒரு பாராளுமன்றத் தொகுதியில் கூட தங்களை வெற்றி பெற வைக்கவில்லை என்ற கோபத்திலும் - எரிச்சலிலும் தமிழ்நாட்டிற்கு ஒரு மத்திய அமைச்சர் பதவி கூடக் கொடுக்காமல் அவமதித்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, பதவியேற்ற அடுத்த நாளே மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

“பதவி” கேட்ட அ.தி.மு.க அரசை “பக்குவமாக” மிரட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு உடந்தையாக இருக்க வைத்துள்ளது. ஆகவே, எடப்பாடி அரசின் எடுபிடி அத்தியாயம் இரண்டாவது முறையாக பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் தொடங்கி விட்டது என்பதையே இந்த மேல்முறையீடு காட்டுகிறது.

Advertisement

பதவியேற்று கையெழுத்திட்ட பேனாவின் மை காய்வதற்குள் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பச்சைத் துரோகம் செய்ய மத்திய பா.ஜ.க. அரசு துடிப்பதையும், அ.தி.மு.க அரசு அதற்கு சரணாகதி அடைந்து நின்று - தூபம் போடுவதையும் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட அத்தனை நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணிக்கு மக்கள் படுதோல்வியை “பரிசாக” மக்கள் கொடுத்தும், இன்னும் இரு அரசுகளுமே பாடம் கற்கவில்லை. தமிழக நலன்களுக்கு எதிராக செயல்படுவதையும்- தமிழக மக்களை வஞ்சித்து பழி வாங்க துடிப்பதையும் கைவிடவில்லை. “அனைவரையும் அரவணைத்துச் செல்வேன்” என்று சொன்ன பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் செயல்பாடு பதவியேற்ற அடுத்த நாளே தமிழ்நாட்டிற்கு விரோதமாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

Advertisement

ஆகவே தமிழக மக்களின் வாழ்வாதாரத்துடன் பா.ஜ.க அரசு இனிமேலும் விபரீத விளையாட்டு நடத்தாமல், சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீட்டை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். 

இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement