This Article is From Jan 03, 2019

''கருணாநிதியின் சாதனை மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும்'' - முதல்வர் பழனிசாமி புகழாரம்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

''கருணாநிதியின் சாதனை மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும்'' - முதல்வர் பழனிசாமி புகழாரம்

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் என்றும், கருணாநிதியின் சாதனை மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக சார்பில் துரை முருகன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பேசினர். இதையடுத்து, தமிழக முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது-

13 வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலைஞர் அவர்கள் பங்கேற்றார். சமூக விழிப்புணர்வை தனது எழுத்து மூலமாக தமிழகம் மட்டுல்லாமல் இந்தியாவுக்கே கலைஞர் கொண்டு சென்றார்.

திரு. கலைஞர் அவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர். எழுத்து, இலக்கியம், பேச்சு, கலை, திரைத்துறை உள்ளிட்டவற்றில் அவர் ஆற்றிய தொண்டு மகத்தானது. சிறப்பான திட்டங்களையும் தமிழகத்திற்கு அளித்துள்ளார். அவரது சாதனை மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும். இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் திரு.கலைஞர்.

பராசக்தி படம் மூலமாக தன்னை ஒரு பகுத்தறிவாளன் என்பதை உலகிற்கு உணர்த்தியவர். தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்ற சாதனையாளர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

.