This Article is From Feb 25, 2019

புகழாரம் சூட்டிய ஸ்டாலின்… கண்ணீர்விட்டு அழுத வைகோ… திருச்சியில் நெகிழ்ச்சி!

திருச்சியில் மதிமுக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் வைகோ மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

புகழாரம் சூட்டிய ஸ்டாலின்… கண்ணீர்விட்டு அழுத வைகோ… திருச்சியில் நெகிழ்ச்சி!

திருச்சியில் மதிமுக சார்பில் ‘தமிழேந்தல் கலைஞர் புகழ் போற்றும் விழா’ ஒருங்கிணைக்கப்பட்டது

ஹைலைட்ஸ்

  • திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது
  • திமுக கூட்டணியில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் இணைய வாய்ப்புள்ளது
  • தோழமைக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறது திமுக

திருச்சியில் மதிமுக சார்பில் நடத்தப்பட்ட பொது நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். வைகோவைப் பற்றி, ஸ்டாலின் புகழ்ந்து உரையாற்றினார். இதைக் கேட்டு வைகோ கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த சம்பவம் இரு கட்சித் தொண்டர்களையும் நெகிழ வைத்துள்ளது. 

மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி காய் நகர்த்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. கொள்கை, கோட்பாடெல்லாம் தள்ளி வைத்துவிட்டு, வெற்றி ஒன்றே நோக்கு என்ற பெயரில் கட்சிகள் அணி சேர்ந்து வருகின்றன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக இணைந்துவிட்டன. இன்னும் தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் அந்தக் கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு மட்டும் தொகுதி பிங்கிட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. தோழமைக் கட்சிகளான மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்டவைகளுடன் திமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேமுதிக மட்டும், மதில் மேல் பூனையாக இருந்து வருகிறது. அக்கட்சி திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்புகளிலும் கூட்டணி குறித்து பேசி வருகிறது. 

இப்படிப்பட்ட சூழலில் திருச்சியில் மதிமுக சார்பில் ‘தமிழேந்தல் கலைஞர் புகழ் போற்றும் விழா' ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

முதலில் பேசிய வைகோ, ‘என் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தவர் கலைஞர். அவர், தனக்குப் பின்னால் மு.க.ஸ்டாலின், திமு கழகத்தை வழி நடத்துவார் என்றார். தன்னிடம் இருப்பதை விட ஸ்டாலினிடம் பல திறமைகள் இருப்பதாக கூறினார். அதை நானும் ஒத்துக் கொள்கிறேன். திராவிட இயக்கத்தைக் காக்க அவருடன் இணைவோம்' என்றார். 

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ‘தலைவர் கலைஞர் உடல்நிலை சரியில்லாமல் கோபாலபுர இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தபோது, வைகோ அவரைப் பார்க்க வந்தார். அப்போது வைகோ, ‘அண்ணே, உங்களுக்கு எப்படி துணை இருந்தேனோ, அதைப் போலவே ஸ்டாலினுக்கும் நான் துணை நிற்பேன்' என்றார் கண்ணீர் ததும்ப. அதைக் கேட்டு கலைஞரும் கண்ணீர் வடித்தார். அந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. 

மதிமுக-வும் திமுக-வும் இணைந்து செயல்படுவது பலருக்குப் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. மத பயங்கரவாதத்தை முறியடிக்க நாம் ஒன்றிணைவோம்' என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார். இதைக் கேட்டு வைகோ, மேடையிலேயே அழுதார். இந்த சம்பவம் இரு கட்சித் தொண்டர்களையும் நெகிழ வைத்தது. 


 

.