அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஹைலைட்ஸ்
- அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது பாமக
- திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என பாமக கூறி வந்தது
- ஸ்டாலினும், அன்புமணியும் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர்
‘'மாற்றம் – ஏமாற்றம் – சூட்கேஸ்மணி'' – என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளது. அக்கட்சிக்கு 7 தொகுதிகளும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாமகவை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது-
திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறிய பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. இதன் மூலம் அதிமுக திராவிட கட்சி இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நல்லவேளை பாமக நம்மிடம் கூட்டணி வைக்கவில்லை.
தமிழகத்தில் அதிமுக வைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி. 2016 சட்டமன்ற தேர்தலின்போது கொள்கை ரீதியாக பாமக 3 முழக்கத்தை வைத்தார்கள். அதை தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்தார்கள்.
அது என்னவென்றால் வெளிநாட்டில் ஒரு தலைவர் (ஒபாமா) விளம்பரத்தை காப்பி அடித்து ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்ற முழக்கத்தை பாமக பரப்பியது. அது அப்போதைய நேரம்.
இந்த தேர்தலில் அதை ‘மாற்றம் ஏமாற்றம் சூட்கேஸ் மணி' என்றுதான் எழுத வேண்டும். அவ்வாறு எழுத வேண்டிய நிலைய நாட்டிற்கு வந்திருக்கிறது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.