மாநாட்டின் மூலம் 3 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்ய புரிந்தணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ஹைலைட்ஸ்
- 23, 24 தேதிகளில் மாநாடு நடந்தது
- மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்
- அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்
சென்னையில் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று முடிவடைந்தது. இந்நிலையில், இந்த மாநாட்டின் மூலம் 3 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்ய புரிந்தணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து அடுக்கடுக்காக விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், ‘2015-ல் நடந்த முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் படு தோல்விகளை, வண்ண மயமான தோரணங்களாகவும், ஆடம்பர வரவேற்பு வளைவுகளாகவும், மிகுந்த பணச்செலவிலான விளம்பரங்களாகவும் அமைத்து, கொலை-கொள்ளை புகார் கூறப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி - அதை அரசின் செலவில் அதிமுகவின் தேர்தல் பிரச்சார மாநாடாக மாற்றியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
மூன்று லட்சத்து 431 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெறும் வகையில், பத்து லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக தனது நிறைவுரையில் வரைமுறையின்றி அளந்துவிட்டிருக்கும் அவர், “2019 ஆம் ஆண்டிற்கான” முதல் பொய் வாக்குறுதியை அவிழ்த்து விட்டு- கடைசி நேரத்திலும் தமிழக மக்களை தன்னால் இயன்ற அளவிற்கு ஏமாற்றி விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்.
2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெற்ற முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் “2.42 லட்சம் கோடி முதலீடுகள் மூலம் 4.69 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன” என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த அறிவிப்புகள் “விதி-110” அறிவிப்புகள் போலவே கடைசி வரை பொய்யாய் பழங்கதையாய் கானல் நீராகி மறைந்து போனது. தமிழகத்தில் தொழில் தொடங்க முனைவோருக்கு அதிமுக அரசின் மீது தேவையான நம்பிக்கையில்லை என்பதே அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அது மட்டுமின்றி- இரு நாட்கள் நடைபெற்ற “இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அமைச்சர்கள் “உல்லாசப் பயணம்” மேற்கொள்ள அனுமதித்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்ததும், சென்னையில் உள்ள முச்சந்திகளிலும், சாலை சந்திப்புகளிலும் எடப்பாடி திரு பழனிசாமியின் படத்தை வைத்து “விளம்பரம்” செய்து- அரசின் பணத்தை வீணடித்ததும்தான் இந்த மாநாட்டின் முக்கிய சாதனை! டாவோஸில் 2019 ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார அமைப்பின் கூட்டம் நடைபெறுகின்ற நேரத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் வர மாட்டார்கள் என்று தெரிந்தும் நடத்தப்பட்ட இந்த இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, ஒரு “மாயமான் காட்சி” என்பது மட்டுமே உண்மை!' என்று பதிவிட்டுள்ளார்.