This Article is From Nov 29, 2019

''தமிழர்கள் நலனை பாதுகாக்கும் அரசாக செயல்பட வேண்டும்'': சிவசேனாவுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

மகாராஷ்டிர முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement
இந்தியா Written by

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள தமிழர்களின் நலனை பாதுகாக்கும் அரசாக உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் தாக்கரே அரசு செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

அமைச்சர்கள் 6 பேருடன் மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்றார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையேற்று ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் கலந்து கொண்டார். 

பதவியேற்பு விழா குறித்து தனது நிலைப்பாட்டை ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

சிவசேனா தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரேவுக்கு திமுக சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சிறப்பான நாளில் நான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. 

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு வளர்ச்சியை அனைத்து துறைகளிலும் ஏற்படுத்தும் என நம்புகிறேன். 

மகாராஷ்டிராவில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசாகவும், அவர்களை முன்னேற்றும் அரசாகவும் இந்த அரசு அமையும் என்று கருதுகிறேன். எங்களுடன் சேர்ந்த மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி உரிமைகளுக்காக இனி உத்தவ் தாக்கரேவும் குரல் கொடுப்பார் என  நம்புகிறேன். 

Advertisement

இவ்வாறு ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

Advertisement