This Article is From Dec 11, 2018

''பெரிய கூட்டணி தேவை. காங்கிரசை விமர்சிக்க வேண்டாம்"- கெஜ்ரிவாலிடம் ஸ்டாலின் வேண்டுகோள்

திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்து வருகிறார்.

''பெரிய கூட்டணி தேவை. காங்கிரசை விமர்சிக்க வேண்டாம்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்கும் காட்சி

New Delhi:

பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ''நாட்டிற்கு மிகப்பெரும் கூட்டணி தேவை. அதில நீங்களும் இருப்பீர்கள். காங்கிரசுக்கு எதிரான கருத்துக்களை கூறாதீர்கள்'' என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை  வரும் 16-ம்தேதி திறக்கப்படவுள்ளது.  இதையொட்டி, சோனியா காந்தி, ராகுல் காந்தி  உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து, விழாவில் பங்கேற்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு  விடுத்து வருகிறார்.  

இந்த நிலையில்,  இன்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவாலை சந்தித்த ஸ்டாலின், அவரிடம் அழைப்பிதழை வழங்கினார். இந்த சந்திப்பின்போது,  திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். சுமார் 30 நிமிடங்களாக சந்திப்பு நடைபெற்றது.

சமீபகாலமாக காங்கிரசுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால்  கருத்துக்களை கூறி வருகிறார். அவருடனான சந்திப்பின்போது, ''காங்கிரசுக்கு எதிராக கருத்துக்களை கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இந்த நாட்டிற்கு மிகப்பெரும் கூட்டணி தேவைப்படுகிறது. அந்த கூட்டணியில் நீங்களும் முக்கிய பங்கு வகிப்பீர்கள்" என்று ஸ்டாலின் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

oglkugv8

முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தியை ஸ்டாலின் சந்தித்த காட்சி

சில  தினங்களுக்கு முன்பாக காஷ்மீர் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான  உமர் அப்துல்லா காங்கிரசுக்கு அட்வைஸ்  செய்திருந்தார். ''ஈகோவை தவிர்த்துக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தோற்றுப் போவீர்கள்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில்  ஆம் ஆத்மிக்கு அட்வைஸ் செய்திருக்கிறார் ஸ்டாலின். 

கடந்த ஆண்டு துணை குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது, ராகுல்  காந்தி கேட்காத வரையில், எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
கடந்த மே மாதம் கர்நாடக முதல்வராக எச்.டி. குமாரசாமி பதவியேற்றார். எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் கெஜ்ரிவால் முதன்முறையாக பங்கேற்றார்.

சில  தினங்களுக்கு முன்பாக பாஜகவுக்கு எதிராக மிகப்பெரும் கூட்டணி அமைப்பது குறித்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். பஞ்சாப் மற்றும் அரியானாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி கடும் சவாலாக இருந்து வருகிறது. இதனால், பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் ஆம் ஆத்மி இடம்பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. 

.