தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக இளைஞரணிக்கு குறைவான இடங்களையே ஒதுக்கியதாகவும், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை ஒதுக்கித் தர வேண்டும் என்றும் கட்சித் தலைமைக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பாக வெற்றி பெற்றவர்களுக்கான கூட்டம் திருச்சியில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது-
திமுக தலைவரிடம் ஒரேயொரு கோரிக்கையை வைக்கிறேன். நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் இளைஞர் அணிக்கு குறைவான இடங்களையே ஒதுக்கினார்கள். அவ்வாறு குறைந்த இடங்கள் ஒதுக்கப்பட்டாலும் அதில் வெற்றி பெற்றிருக்கிறோம். பரவாயில்லை. குறைந்த வாய்ப்புகளையே ஊரக உள்ளாட்சி தேர்தலில் அளித்துள்ளீர்கள்.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிக வாய்ப்புகளை அளித்தால் இளைஞரணி தம்பிமார்கள் கண்டிப்பாக வெற்றி பெற்றுக் காட்டுவோம். ஊரக உள்ளாட்சி தேர்தலில் இளைஞரணிக்கு போட்டியிட வாய்ப்பு அளித்த அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.