This Article is From Oct 25, 2019

"திமுக, காங்கிரஸூக்கு எழ முடியாத அளவுக்கு மரண அடி"; உற்சாகத்தில் அதிமுக!!

வாக்கு எண்ணிக்கை காலையில் தொடங்கியது முதல், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 

திருமங்கலம் ஃபார்முலாவை அனைத்துத் தேர்தல்களிலும் திமுக கையாண்டது - ஜெயக்குமார்

திமுக, காங்கிரஸூக்கு மக்கள் எழ முடியாத அளவுக்கு மரண அடி கொடுத்துள்ளனர் என அமைச்சர் ஜெயக்குமார் உற்சாகமாக தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில்  காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இந்த இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (அக்.24) எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை காலையில் தொடங்கியது முதல், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 

இதனையடுத்து, சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது, “விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் அதிமுக வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர். 

இரு தொகுதிகளும் அதிமுக மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார். மேலும், இடைத்தேர்தலை போன்று உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக வெற்றி தொடரும் என்று கூறினார்.

இதுதொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, “தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் விக்கிரவாண்டியிலும், தெற்கு பகுதியில் நாங்குநேரியிலும் கிடைத்துள்ள இந்த வெற்றி தமிழ்நாடு முழுவதும் அதிமுக அரசுக்கு ஆதரவு இருப்பதை உறுதி செய்துள்ளது. 

இந்தத் தேர்தல், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெற்ற ஒரு போட்டி. இதில் தர்மம் வென்றிருக்கிறது. அதர்மம் தோற்றிருக்கிறது. பாண்டவர் படைக்கு முன்னால் கவுரவப் படை ஓடி ஒளிந்திருக்கிறது. இந்த நிலைதான் நாளையும் தொடரும். 

இந்த வெற்றியுடன், உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் அதனைச் சந்திப்போம். அதுமட்டுமல்லாமல் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும். இந்த வெற்றியைப் பிரித்துப் பார்க்கக் கூடாது. அதிமுக தலைமையிலான கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி இது.

திருமங்கலம் ஃபார்முலாவை அனைத்துத் தேர்தல்களிலும் திமுக கையாண்டது. பிள்ளைகளுக்கு சாக்லேட்டுகள் கொடுத்து ஏமாற்றுவது போல பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து கடந்த மக்களவை தேர்தலில் திமுக வென்றது. இதனை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.

இந்த பணநாயகத்துக்கும் ஜனநாயகத்துக்கும் உண்டான போட்டியில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. திமுக, காங்கிரஸ் பணத்தை மட்டுமே நம்பியிருந்தன. அவர்கள் எழ முடியாத அளவுக்கு மக்கள் மரண அடியைக் கொடுத்திருக்கின்றனர் என்று அவர் கூறினார். 

.