This Article is From Sep 20, 2018

‘திமுக, காங்கிரஸ் போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும்!’- அதிமுக தீர்மானம்

இலங்கையில் நடந்த போரின் போது இந்திய அரசு, இலங்கை அரசுக்கு உதவி செய்தது என்று அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்

Advertisement
இந்தியா Posted by

ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக-வின் தலைமையகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது

அதிமுக-வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ‘2009 போரின் போது இலங்கை அரசுக்கு உதவி செய்ததற்காக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த 2009 ஆம் ஆண்டு, இலங்கையில் நடந்த போரின் போது இந்திய அரசு, இலங்கை அரசுக்கு உதவி செய்தது என்று அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தது. அதில் திமுக முக்கிய பங்கு வகித்தது. இந்தக் காரணத்தினால் தான், திமுக மற்றும் காங்கிரஸ் போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அதிமுக கூறுகிறது. 

நேற்று சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக-வின் தலைமையகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதிமுக-வின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

அப்போது, ‘தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, இலங்கையில் அப்பாவி தமிழ் மக்களை கொன்றதற்காக திமுக மற்றும் காங்கிரஸ் போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரினார். தற்போது அவரது வாதத்தை மெய்பிக்கும் வகையில் அந்நாட்டு அதிபராக இருந்த ராஜபக்சேவே, இந்திய அரசு போரின் போது உதவியது என்று கூறியுள்ளார். ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றதற்கு துணை போனதற்காக திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை போர் குற்றவாளிகளாக அறிவித்து தண்டிக்கப்பட வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement