This Article is From Mar 30, 2019

நேர்ல எதிர்க்க முடியாம ரெய்டுன்னு பூச்சாண்டி காட்டுறாங்க! - துரைமுருகன்

பொய் வழக்கு போடுவது, பூச்சாண்டி காட்டுவது இதற்கெல்லாம் பயந்தவன் திமுகவின் கடமட்டத்தில் கூட கிடையாது என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

நேர்ல எதிர்க்க முடியாம ரெய்டுன்னு பூச்சாண்டி காட்டுறாங்க! - துரைமுருகன்

காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் இன்று அதிகாலையில் சோதனை நடத்தினர். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். 

இந்நிலையில், வாக்களர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் உள்ளிட்ட பரிசுபொருட்கள் துரைமுருகன் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 

இதனிடையே, சோதனைக்கு வந்தவர்களின் அடையாள அட்டைகளில் முரண்பட்ட தகவல் இருந்ததால், இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சோதனை நடத்த இரவு 10.30 மணிக்கு வந்த அதிகாரிகள் 4 மணி நேரம் நீடித்த வாக்குவாதத்துக்குப் பின் அதிகாலையில் வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினர். 

அப்போது, துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் ஆவணங்களோ, பணமோ எதுவும் கைப்பற்றபடவில்லை. இந்த சோதனை குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று காலை செய்தியாளர்களிடம் கூறும்போது, 

சோதனை செய்வதற்கு இது காலம் அல்ல. இந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைய வேண்டிய அவசியம் என்ன? வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்தின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது, அதை திசைதிருப்ப வேண்டும் என்பதற்கே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. 

களத்தில் எங்களை எதிர்க்க திராணியற்ற கடைந்தெடுத்த அரசியல்வாதிகள் செய்த சூழ்ச்சி. நேருக்கு நேர் எதிர்க்க முடியாமல் எங்கள் முதுகில் குத்த பார்க்கின்றனர். மத்திய, மாநில அரசோடு கூட்டணி வைத்துள்ள சில அரசியல்வாதிகள் வருமான வரித்துறை சோதனை மூலம் சூழ்ச்சி செய்கின்றனர். 

மிரட்டுவதன் மூலம் எங்களை பணியவைக்க முடியாது. நாங்கள் மிசாவை பார்த்தவர்கள், அடக்குமுறையை பார்த்தவர்கள். மத்திய அரசு காலில் விழுந்து வருமான வரித்துறையை வைத்து மிரட்டி பார்க்கின்றனர். பொய் வழக்கு போடுவது, பூச்சாண்டி காட்டுவது இதற்கெல்லாம் பயந்தவன் திமுகவின் கடமட்டத்தில் கூட கிடையாது. 

எங்களை எதிர்ப்பவர்கள் நேரடியாக எதிர்க்க வேண்டும், இதையெல்லாம் பொருட்படுத்த மாட்டோம். மோடியின் இந்த வருமான வரித்துறையை ஏவி விடும் தத்துவம், அரசியலில் வெற்றியை தராது, பகையை கொண்டு வந்து சேர்க்கும் என்று அவர் கூறியுள்ளார்.

.