அதிமுகவுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக புகார் வந்ததையடுத்து, அதிமுகவுக்கு எதிராக கட்சி விரோத செயலில் ஈடுபடுவதாக அவர்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் மனு அளித்தார்.
இதைத்தொடர்ந்து, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேரிடம் விளக்கம் கேட்டு சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதிமுக கொறடா அளித்த புகாரின் அடிப்படையில் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 7 நாட்களுக்குள் நோட்டீசுக்கு விளக்கம் தர வேண்டும் என்றும் மூவரின் பதிலும் திருப்தி தரவில்லை என்றால் தகுதி நீக்கம் செய்யவும் சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது என்றும் சபாநாயகர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது. பேரவை செயலாளர் சீனிவாசனை நேரில் சந்தித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்தார். இந்நிலையில் 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையிட்டுள்ளது.
அதில் சபாநாயகர் தனபால் நடுநிலையை தவறிவிட்டார். அதனால் நாங்கள் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம். இந்நிலையில் 3 எம்எல்ஏக்கள் விவகராத்தில் நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தனபாலுக்கு உரிமை இல்லை. எனவே 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். திமுகவின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.