This Article is From Oct 02, 2018

அமைச்சர் தங்கமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார்: திமுக அதிரடி!

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணிக்கு எதிராக திமுக, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் தெரிவித்துள்ளது

அமைச்சர் தங்கமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார்: திமுக அதிரடி!

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணிக்கு எதிராக திமுக, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் தெரிவித்துள்ளது. காற்றாலை மின் உற்பத்தியிலும், நிலக்கரி வாங்கிய விவகாரத்திலும் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டி, திமுக, புகார் அளித்துள்ளது.

ராஜ்யசபா எம்.பி-யும், திமுக-வின் அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் அளித்த புகாரில், ‘தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி, தமிழக மின்சார பகிர்மானக் கழகத்தின் மூலம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். தரமற்ற நிலக்கரி வாங்கியது, முறையற்ற முறையில் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்தது, மின்சாரம் உற்பத்தி செய்யப்படாமலேயே உற்பத்தி நடந்ததாக கணக்குக் காட்டியது என பல்வேறு முறைகேடுகளில் அவர் ஈடுபட்டுள்ளார். எனவே சீக்கிரமே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல், ‘யார் வேண்டுமானாலும் யார் மீதும் புகார் கொடுக்க முடியும். திமுக-வால் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளும் ஆதாராமற்றவை. திமுக-வுக்கே அவர்கள் கொடுத்த புகாரில் எந்த உண்மையும் இல்லை என்பது தெரியும்’ என்று தெரிவித்துள்ளார்.

திமுக, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஏற்கெனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறை புகார் குறித்து முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது திமுக.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.