This Article is From Mar 09, 2020

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் இறுதி ஊர்வலம்! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகனின் வீட்டிலிருந்து அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. அயனாவரம் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகின்றது.

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் இறுதி ஊர்வலம்! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!

உடல்நலக் குறைவு காரணமாக அன்பழகன் இன்று அதிகாலை 1 மணிக்கு காலமானார்.

மறைந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் இறுதி ஊர்வலம் மாலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

கடந்த 43 ஆண்டுகளாக திமுகவின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்து வந்த மூத்த அரசியல் தலைவர் பேராசிரியர் க.அன்பழகன் நள்ளிரவு 1 மணிக்கு காலமானார், கடந்த சில நாட்களாகவே உடல்நலம் குன்றி காணப்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்தது. 

அன்பழகனின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

d5b21cho

இதையடுத்து, அன்பழகனின் கீழ்ப்பாக்கம் இல்லத்திலிருந்து அவரது இறுதி ஊர்வலம் புறப்பட்டுச் சென்று அயனாவரம் மயானத்தை அடைந்தது. இதில் ஸ்டாலின், கனிமொழி, துரை முருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 

ndtkcdo8

பேராசிரியர் க.அன்பழகன் 1977ம் ஆண்டு முதல் ஒன்பது முறை திமுகவின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர். அவர் ஒன்பது முறை எம்.எல்.ஏ., பதவியிலும் ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும், மேலும் தமிழ்நாட்டின் முன்னாள் நிதியமைச்சராகவும் திகழ்ந்தவர்.  க.அன்பழகன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய  நண்பருமாவார்.

1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றியதால் அவர் 'பேராசிரியர்' என்று அழைக்கப்பட்டார். அன்பழகனின் இறப்பு குறித்து தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் "பொதுச் செயலாளர் க. அன்பழகனின் மறைவுக்கு திமுக இரங்கல் தெரிவிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திமுக தனது கட்சியின் அனைத்து செயல்பாடுகளையும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கும் என்றும், மேலும் அனைத்து இடங்களிலும் உள்ள திமுகவின் கட்சிக் கொடிகள் ஒரு வாரத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.