This Article is From Sep 10, 2018

எழுவர் விடுதலைக்கான பரிந்துரை… திமுக வரவேற்பு!

ராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்யச் சொல்லி தமிழக அரசு ஆளுநர் பன்வாரிலால் புரோகிதுக்கு பரிந்துரை செய்துள்ளது

Advertisement
தெற்கு Posted by

ராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்யச் சொல்லி தமிழக அரசு ஆளுநர் பன்வாரிலால் புரோகிதுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த முடிவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். 

மேலும் அவர், ‘தமிழக ஆளுநர் உடனடியாக தமிழக அரசின் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார். 

அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ‘7 பேரும் பல ஆண்டுகள் சிறையில் இருந்தனர் என்பது உண்மை தான். ஆனால், அவர்களை விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். சட்டம் என்பது எல்லோருக்கும் பொது தான். அதில், கருணை போன்ற காரணங்கள் குறுக்கிடக் கூடாது’ என்று கருத்து தெரிவித்துள்ளார். 

தமிழகத்தின் பிற அரசியல் கட்சிகளான பாமக, அமுமுக உள்ளிட்டவையும் எழுவர் விடுதலை குறித்த பரிந்துரையை வரவேற்றுள்ளது. 

Advertisement

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது தமிழக அமைச்சரவை.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ், ரவிசந்திரன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 வருடங்களாக சிறையில் உள்ளனர்.

Advertisement

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகிய மூவர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது, ‘குற்றம் சுமத்தப்பட்ட 7 பேர் குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உரிமையுண்டு. அவர்கள் ஆளுநருக்கு விடுதலை குறித்து பரிந்துரை செய்யலாம்’ என்று தெரிவித்தது.

Advertisement

அதனை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து தமிழக அமைச்சரவையில் நேற்று விவாதிக்கப்பட்டது. ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement