This Article is From Jun 05, 2019

’திமுக தான் மதம் சார்ந்த அரசியலை செய்கிறது’: ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி!

’திமுக தான் மதம் சார்ந்த அரசியலை செய்கிறது’என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி அளித்துள்ளார்.

’திமுக தான் மதம் சார்ந்த அரசியலை செய்கிறது’: ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி!

முன்னதாக, சென்னை கெளத்தூரில் நேற்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் பேசும்போது, தமிழகத்தை பொறுத்தவரை மதவெறி பிடித்தவர்களுக்கு, மதத்தை வைத்து அரசியல் நடத்த வேண்டும் என்ற உணர்வோடு அரசியல் நடத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு, மதத்தை பிரித்து அதன் மூலமாக அரசியல் லாபம் தேடலாம் என்று கருதுபவர்களுக்கு தமிழகத்தில் நிச்சயமாக இடம் இல்லை என்பதை தமிழக மக்கள் நிரூபித்து காட்டி இருக்கிறார்கள்.

இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன்,

எந்த மொழியையும் கட்டாயம் திணிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகள் தான் மத்திய அரசு இந்தியை திணிப்பது போல் பேசி வருகிறது. இல்லாத திணிப்பை, இருக்கின்ற திணிப்பாக பேசி, தமிழகத்தை மீண்டும் போராட்டக்களமாக மாற்ற முயற்சி செய்கின்றனர்.

மதம் சார்ந்த அரசியல் தமிழகத்தில் எடுபடவில்லை என்கின்றனர். யாரும் மதம் சார்ந்த அரசியலை செய்யவில்லை, அப்படி பார்த்தால் அவர்கள் தான் மதம் சார்ந்த அரசியலை செய்து கொண்டு இருக்கின்றனர்.

ஒரு மதத்தை எதிர்த்து பேசுகிறார்கள், இன்னொரு மதத்திற்கு ஆதரவாக இருப்பது போல காட்டிக்கொண்டு அதன் மூலம் அரசியல் செய்கின்றனர். அனைவரையும் சமமாக நடத்துவது பாஜக தான்.

இவர்கள் பிரிவினையை தூண்டி விட்டு, மற்றவர்கள் பிரிவினையை தூண்டி விட்டது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள், அவர்கள் எல்லாம், போலி மதச்சார்ப்பின்மையாளர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், கருணாநிதி மிகப்பெரிய தலைவர் எனவும், அவரது இடத்தை ஸ்டாலின் நிச்சயம் பிரதிபலிக்கமாட்டார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

.