ரயில்வே தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
New Delhi: திட்டங்களுக்கு மத்திய அரசு இந்தி மொழியில்தான் பெயர் வைக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ள திமுக எம்பி கனிமொழி, இந்தியில் பெயர் இருந்தால் தனது தொகுதி மக்கள் எப்படி திட்டத்தின் பெயரை அறிந்து கொள்வார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலங்களவை எம்.பி.யாகவே இருந்து வந்த கனிமொழி முதன்முறையாக தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றுள்ளார். மக்களவையில் இன்று அவர் பேசியதாவது-
மத்திய அரசு தான் கொண்டு வரும் திட்டங்களுக்கு இந்தியில்தான் பெயர் வைக்கிறது. எனது தொகுதியில் ஒரு கிராமத்தை சேர்ந்த ஒருவர் எப்படி அந்த திட்டத்தின் பெயரை தெரிந்து கொள்ள முடியும்? தூத்துக்குடியில் வைக்கப்பட்டிருந்த எழுத்துப் பலகையில் பிரதமர் மோடி சதக் யோஜனா என்று எழுதப்பட்டிருக்கிறது. எந்தவொரு மொழி மாற்றமும் அதில் இல்லை. எனக்கு இது புரியவில்லை.
இந்திய ரயில்வே அல்லது சேலம் உருக்காலை உள்ளிட்டவற்றை மத்திய அரசு தனியார் மயமாக்குவதை எதிர்க்கிறோம். இதனை திமுக தடுத்து நிறுத்தும்.
இன்னமும் ரயில்வேயில் கழிவுகளை மனிதர்களே அப்புறப்படுத்தும் நிலை உள்ளது. இந்த சூழலில் புல்லட் ரயில் வருவது குறித்து வெட்கப்பட வேண்டும்.
இவ்வாறு கனிமொழி பேசினார்.