This Article is From Sep 08, 2018

மத்தியில் 4 ஆண்டுகளாக மக்கள் விரோத அரசுதான் செயல்படுகிறது – திமுக குற்றச்சாட்டு

சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய மாநில அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மத்தியில் 4 ஆண்டுகளாக மக்கள் விரோத அரசுதான் செயல்படுகிறது – திமுக குற்றச்சாட்டு

திமுகவின் தலைவராக கடந்த மாதம் 28-ம் தேதி மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் மத்திய பாஜக அரசை கண்டித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் ஸ்டாலின், அரசியலமைப்பு மாண்புகளை என்ன விலை கொடுத்தாவது நிலை நிறுத்துவோம் என்று கூறினார்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

தமிழகத்தின் நலனை மத்திய பாஜக அரசு புறக்கணிக்கிறது. நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிராக செயல்படும் பாஜக அரசு வகுப்புவாதத்தை தூண்டி வருகிறது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் மனித உரிமை ஆர்வலர்கள் கூட தேச விரோதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்.

தலித்துகளும், சிறுபான்மையினரும் பல இடங்களில் தாக்கப்படுகின்றனர். அந்த பகுதிகளில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியைப் போல நிலைமை உள்ளது. தேர்தல் சர்வாதிகாரத்தை பாஜக நிலை நிறுத்தி வருகிறது. மத்தியில் கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் விரோத அரசுதான் செயல்பட்டு வருகிறது. தேர்தல் சர்வாதிகாரம் என்பது ஜனநாயத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால். தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகளை பாஜக கட்டுப்படுத்துகிறது.

பாஜக ஆட்சியில் நீதித்துறையிலும் நெருக்கடி நிலவுவதைத்தான் சமீபத்தில் நடந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பு சுட்டிக்காட்டுகிறது. அவசர கதியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, டீசல் பெட்ரோல் விலை ஏற்றம் என நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசைக் கண்டித்து செப்டம்பர் 18-ம்தேதி மாநில அளவில் போராட்டம் நடைபெறும்.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பேரறிவாளனின் கருணை மனுவை மாநில கவர்னர் ஏற்கமுடியும். ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விரைவில் விடுவிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அமைச்சரவை உடனடியாக தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறான தீர்மானங்கள் திமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

.