செவ்வாயன்று சூடானில் தொழிற்சாலையில் ஏற்பட்ட கேஸ் டாங்கர் வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 18 பேர் இந்தியர்கள்.
New Delhi: சூடான் நாட்டில் உயிரிழந்த 18 இந்தியர்களில் தமிழர்களான 6 பேரின் உடலை மீட்டுத் தர வேண்டும் என மத்திய அரசை திமுக எம்.பி. டி.ஆர். பாலு இன்று வலியுறுத்தியுள்ளார். சூடான் தலைநகர் கார்டோமில் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.
கார்டோமில் செவ்வாயன்று பீங்கான் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 18 பேர் இந்தியர்கள்.
உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவித்த மூத்த தலைவர், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
'உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை உடனடியாக மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மேற்கொள்ள வேண்டும். இழப்பீட்டை சூடான் அரசும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகரான உங்களை கேட்டுக்கொள்கிறேன். வெடி விபத்தில் தமிழர்கள் 6 பேர் உயிரிழந்தனர்' என்றார் பாலு.
இந்த சம்பவம் மிகவும் சோகம் அளிக்கிறது என்று தெரிவித்த பாஜகவின் ராஜிவ் பிரதாப் ரூடி, உடல்களைக் கொண்டுவர வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சூடான் அரசிடமிருந்தும் இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.