அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் அன்பழகனின் உருவப்படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ஹைலைட்ஸ்
- திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கொரோனா பாதிப்பால் இன்று காலமானார்
- கண்ணம்மா பேட்டை மயானத்தில் இறுதி சடங்கு நிறைவேற்றப்பட்டது
- அறிவாலயத்தில் வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் அஞ்சலி
கொரோனா பாதிப்பால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. கண்ணம்மா பேட்டை மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு என்பதால் மிக குறைவானவர்களே இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
திமுக தலைமையகமான அறிவாலயத்தில் அன்பழகனின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன் (62) கடந்த 8 நாட்களாக கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை 8 மணியளவில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் 2001, 2011 மற்றும் 2016 என மூன்று முறை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக தென் சென்னை மாவட்டச் செயலாளராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 7,745 ஆக இருக்கக்கூடிய நிலையில், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும்.
தமிழக முதல்வர் பழனிசாமி, ‘திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
ஜெ.அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ‘இதயத்தில், இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது போன்ற செய்தியா காலை நேரத்தில் வர வேண்டும்? திராவிட இயக்கத்தின் தீரர் பழக்கடை ஜெயராமனின் செல்ல மகன், தலைவர் கலைஞரின் அன்பையும் ஆதரவையும் அளவின்றிப் பெற்ற உடன்பிறப்பு, பாசத்திற்குரிய சகோதரர், பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றிய ஆற்றல்மிகு தளகர்த்தர், சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் நம்மை விட்டுப் பிரிந்தே விட்டார் என்ற செய்தியை ஏற்க ஏனோ என் மனம் மறுக்கிறது' என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவால் அன்பழகன் உயிரிழந்தார் என்பதால், அவரது உடல் மாநகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்த அன்பழகனின் உடல் கண்ணம்மா பேட்டை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் அன்பழகனின் உருவப்படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.