அமைச்சரை ஒருமையில் பேசியதால், சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் பேசினார்.
இதில், உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், அன்பழகனுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அமைச்சரைப் பார்த்து ஜெ.அன்பழகன், ஒருமையில் பேசியதாக தெரிகிறது. இதனால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
இதைத்தொடர்ந்து, பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இதுபோன்ற செயல்களில் ஜெ.அன்பழகன் அடிக்கடி செயல்படுகிறார். அரசு ரீதியாகவோ, அல்லது கட்சி ரீதியாகவோ கேள்வி எழுப்பினால் பதிலளிக்க நாங்கள் தயார். ஆனால் தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பது ஏற்க முடியாது. எனவே அவரை அவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார்.
இதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் எழுந்து நின்று ஜெ.அன்பழகனின் நடவடிக்கைக்கு அவையில் வருத்தம் தெரிவித்தார். பின்னர், சற்று அமைதியானது. ஜெ.அன்பழகன் செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர் வருத்தம் தெரிவித்ததால் மறப்போம், மன்னிப்போம்' என ஓ.பன்னீர் செல்வம் பேசினார். எனவே, இந்த விவகாரத்தில் ஜெ.அன்பழகன் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. எச்சரிக்கை மட்டும் செய்தார்.
அதேசமயம், ஆளுநரின் உரையை கிழித்து சபாநாயகரின் இருக்கை முன் வீசியதால், ஜெ.அன்பழகன் இந்த கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால் தடை விதிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் தனபால் கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெ.அன்பழகன், நான் பேசும்போது அமைச்சர்கள், சபாநாயகர் அடிக்கடி குறுக்கிட்டனர். எதில் முதலிடம் என கேட்டதற்கு முதலமைச்சர் பதிலளிக்க மறுத்துவிட்டார். என் பேச்சுக்காக ஸ்டாலின் வருத்தம் தெரிவித்த பிறகும் பிரச்னை செய்கின்றனர் எனத் தெரிவித்தார்.