திருவாரூரில் இந்த மாதம் 28 ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களையும் அறிவித்தது. ஆனால், இன்று திடீரென்று, ‘திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது' என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை தொடர்ந்து அவர் வகித்து வந்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பதவி காலியானது. இதையடுத்து அந்த தொகுதிக்கு ஜனவரி 28-ம்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து முக்கிய கட்சிகள் அனைத்தும், வேட்பாளர்ளை அறிவிக்கும் பணியில் ஈடுபட்டன. முதல்கட்டமாக டிடிவி தினகரனின் அமமுக-வின் வேட்பாளராக எஸ்.காமராஜ் அறிவிக்கப்பட்டிருந்தார். திமுக தரப்பில் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இப்படிப்பட்ட சூழலில் தேர்தல் நடத்துவதற்கான சூழல்நிலை தற்போது இல்லாத காரணத்தால், ஜனவரி 28-ம் தேதி நடக்கவிருந்த திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் இன்று எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணி அளவில் நடக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், அனைத்து எம்.எல்.ஏ-க்களும் தவறாமல் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், திமுக-வின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.