This Article is From Feb 07, 2019

நாளை திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்; பரபரப்பில் தமிழக அரசியல் களம்!

தமிழக அரசு 2019-20 ஆண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளது

நாளை திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்; பரபரப்பில் தமிழக அரசியல் களம்!

இந்தக் கூட்டத்திலேயே அடுத்தடுத்த தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படலாம்

ஹைலைட்ஸ்

  • நாளை தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்கிறது
  • நாளை மாலை திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறும்
  • மக்களவைத் தேர்தல் வியூகங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் பேசப்படலாம்

தமிழக எதிர்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மாலை 5 மணி அளவில், சென்னையில் இருக்கும் கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக அரசு 2019-20 ஆண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருப்பதனால், இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, மத்தியில் இந்த முறை தாக்கல் செய்யப்பட்டது வெறும் இடைக்கால பட்ஜெட்தான். ஆனால், தமிழகத்தில் நாளை தாக்கலாக உள்ளது முழு நிதி ஆண்டுக்கான பட்ஜெட். இந்த விரிவான பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்குமான அறிவிப்புகள் வெளிவரும் என்பது கவனிக்கத்தக்கது. பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்துதான் திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்தக் கூட்டத்தின் நோக்கம் குறித்து தகவல் சொன்ன திமுக வட்டாரம், ‘பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர், பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும். அதில் யாரெல்லாம் பேசலாம். எந்த விஷயங்கள் குறித்து பேசலாம், உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படும். அதேபோல, நாடாளுமன்றம் மற்றும் இடைத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் பணிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும். 

திமுக-வைப் பொறுத்தவரை, பல எம்.எல்.ஏ-க்கள்தான் மாவட்டச் செயலாளர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். எனவே, இந்தக் கூட்டத்திலேயே அடுத்தடுத்த தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படலாம்' என்று தகவல் சொன்னது. 

திமுக - காங்கிரஸ் சார்பில் கூட்டணி அமைந்துவிட்டதால், மற்ற தோழமை கட்சிகளான மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கிடுவது, கூட்டாக சேர்ந்து செயல்படுவது, அதிமுக தலைமையில் அமையப் போகும் கூட்டணிக்கு எதிராக வியூகம் அமைப்பது உள்ளிட்டவைகள் குறித்து திமுக மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

.