This Article is From Jan 06, 2020

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!

குடியுரிமை சட்டத்தை கண்டித்து ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி ஆளுநர் உரையை தொடங்கினார். 

இந்நிலையில் ஆளுநர் பேசிக்கொண்டிருக்கும் போதே உரையை புறக்கணித்து பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது, குடியுரிமை சட்டத்தை கண்டித்து ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.

7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. தமிழகத்தின் கடன் 4 லட்சம் கோடியாக உயர்வு; இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று கூறினார். 

நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது கபடநாடகம் எனவும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தமிழக ஆளுநர் உரையால் நாட்டில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் சில, இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தும், தமிழக மக்கள் எந்த ஒரு மதம், சமயத்தை பின்பற்றினாலும், அவர்களை தமிழக அரசு பாதுகாக்கும், தமிழக மீனவர்கள் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு சுமூக தீர்வுகாண வேண்டும், முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தத் தேவையான அனுமதியை கேரள, மத்திய அரசுகள் தர வேண்டும் உள்ளிட்டவை அவரது உரையில் முக்கியம்சங்கள் ஆகும்.

.